Posts Tagged ‘Haasya kadhai’




Short Story – Ettambu (8th standard)

மிகத் திறந்த வெளியில் சில இலட்சிய கனவுகளோடு இருந்த என்னை ஏறிட்டாள் என் மனைவி சங்கீதா.
‘நீங்க வெளிநாடு போயிட்டா நான் பார்க்காவே முடியாது இல்ல, உங்களுக்கும் எத்தனை கஷ்டம், திரும்பி எப்ப வருவீங்க’,
பேசாமலிருந்த என்னை விலக்கி முகம் பாத்தாள், அவள் முகத்திலிருந்த பருக் கூட தொலையவில்லை, பதினெட்டு வயது பெண் கட்டிக்கொண்டாள், கல்யாணமான மூன்றாம் மாதமே எனக்கென்னவோ அதிக தேவைகள் இருப்பதாக எண்ணி ஒரு ஏஜெண்டை மன்னிக்கவும் ஒரு ஆள் ஏத்தி தரகனை பிடித்து சிங்கப்பூர் கனவுகளில் நிழலாடிக்கொண்டிருக்கிறேன்,
‘மெல்லப்போகக்க்கூடதா?’
‘வயசு இருக்கப்பவே சம்பாதிச்சிடனும் செல்லம், உன் அப்பா போட்ட நாற்பது பவுன் நகையை மார்வாடிக்கிட்ட வைச்சா என்ன தேறும்’
‘அதுக்குள்ளவேன்னா, கோவிச்சிக்கமாட்டாளா.?’
‘நாற்பது பவுன் என்னடி, வர்ரச்சே நாலு கிலோ கொண்டாறேன், தங்கத்துல அபிஷேகமே பண்றேன், இப்ப எதாவது கத்தினார்னா அப்ப பாத்துக்கலாம், கொண்டு போய் மூஞ்சிக்கு எதிர்ல கொட்டலாம்’,
‘இதெல்லாம் சரிப்படுமா?…’
என்று இழுத்தாள்.
‘அசடு..அசடு இருக்கற நல்ல வேலையை விட்டுடக்கூட இல்ல நான், ஒரு இரண்டு வருஷம் ஜகா வாங்கிண்டு போறேன், அப்புறம் பாரு, காரு,ஏசி,பங்களான்னு ஜமாய்ச்சுடலாம்’
‘இப்ப உங்க சம்பளம் பதினேழு சொச்சம் வாங்கறீங்க, அதுவே போறாதா?’
‘என்னடி அசமங்சமா பேசற, கம்ப்யூட்டர் எங்ஜினியர்க்கெல்லாம் சாரி பொறியாளர்க்கெல்லாம் என்ன கிராக்கின்னு உன் எட்டாங்கிளாசுக்கு எங்க புரியப்போறது, கழுதைக்கு தெரியுமா…’
‘சரி சரி திட்டாதிங்க, நான் ஆச்சு நகை கொடுக்க, என் அப்பாரை வீணா வம்புக்கிழுக்காதிங்க, மருமகன் நல்லாருந்தா அவருக்கும் மரியாதை தானே’
‘மரியாதை, எனக்கு என்னடி மரியாதை, மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு ஒரு டப்பா காரை அரேஞ் அது என்ன ஏற்பாடு பண்ணி அது பார்த்தசாரதி கோயில்ல டயர் பஞ்சராகி (தமிழில் அர்த்தம் தெரியவில்லை) சகுணம் சரியில்லையென்று சண்டை ஆரம்பிக்க கடைசில என் அம்மா காது கிழியறாப்பல என் அப்பா அடிச்சிட்டது எல்லாம் ரொம்ப அபத்தம்’
சங்கீதா பேசாமலிருந்தாள்
‘அப்ப உங்க முடிவை மாத்திக்கல’
‘கல’
‘சரி! உங்க இஷ்டம், எனக்கு இந்த மஞ்ச கயிறு போதும், நீங்க ஷேமமா போங்கோ, வேளாவேளைக்கு..’
‘ஸ்டாப், ஸ்டாப் இட் எல்லாம் நடக்கும், எங்க உன் நகைங்க!’
அடுத்தநாள் பங்கஜ்லால் சேட்டிடம் தமிந்தியில் பேசி வீராவேசமாக பணம் ஒரு லட்ஷம் வாங்குவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது, கிராம கூட்டுறவு வங்கியில் வட்டி குறைச்சல் அசல் கம்மியாக வரும், சேட்டிடம் வட்டி அதிகம், இருந்தாலும் டாலர்களில் சம்பாதிக்கும் போது இதெல்லாம் துக்கடா.
சங்கீதா ஒரு லட்ஷத்தை வாங்கி அடுக்களை, சாமி அறை, அஞ்சரைப்பெட்டி, அரிசிப்பாணை, தலையணை என்று வைக்க இடம் பார்த்து ஒன்றும் தேறாமல் அந்த ஒரு லட்ஷத்தை என்னிடமே திருப்பித்தந்தாள்,
‘பேங்க் அக்கொளன்ட்ல போட்டுடுங்களேன்’
‘தமிழ்ல சொல்லுடி!’
‘நீங்களும் உங்க தமிழும் இங்கிலீஷ் அர்த்தம் சொன்னா தான் தமிழே புரியப்போற காலம் வரப்போறது பாருங்க’
‘சரி சரி, நாளைக்கு விஸா கிடைச்சுடும்டி, இன்னைக்கே பணம் தந்துடணும், அவன், அவன் வேளயை பார்க்கவேணாம்’
‘அதுவும் அரி தான், எங்க அப்பா குருவி சேக்கறா மாதிரி சேத்தது, கை காசில்லாம இருந்த ஸ்கூட்டரை கூட வித்துட்டுது, பாத்துக்கங்க’
அவள் கவலை எனக்கு புரியும், இருந்தாலும் அவளுக்கு மேலும் மேலும் புரியவைக்க எனக்கு பிரயாசை இல்லை, கிளம்பிவிட்டேன்.
அந்த ஆள் ஏத்தித்தரகன் சிதம்பரத்தின் மைய்யத்தில் அலுவலகம் வைத்து, ஒரு ஒன்றறை ஆயிரம் குளிர் அறையில் அவன் மட்டும் பணத்துடன் புழங்கிக்கொண்டிருக்க, வெளியில் அவன் வேலை ஆட்கள் விசிறிக்கொண்டிருந்தார்கள், என்னை பார்த்ததும் ஒரு டீ வந்தது.
‘சரவணன் இதப்பாருங்க, நீங்க சிங்கப்பூர்ல வேலை செய்யப்போற கம்பெணி பெரிய மல்டினேஷன் கம்பெணி, அதில வேலை வாங்கறதுக்குள்ள பெரும்பாடாயிட்டுது, மெடிக்கல் முடிச்சுடலாம், எப்படியும் அங்க ஒரு மெடிக்கல் இருக்கும், கையில் டாலரா மாத்தி பணம் வைச்சுக்கங்க, ஏர்ப்போர்ட்ல இறங்கினதும் கமிட்டி பீப்பிள்ஸ் வந்து ரிஸீவ் பண்ணிப்பாங்க, தெரியுதுங்களா!’
‘சரிங்க!’
‘பாஸ்போர்ட்டையும் பணத்தையும் தந்துட்டு பில் வாங்கிட்டுப்போங்க, நாளைக்கு விஸா பேஃஸ் வந்ததும் மீதி பணத்தை கட்டிடுங்க, அப்புறம் ஒண்ணு, டிக்கெட் பிளாக் பண்ணணும், நளைக்கு பணத்தை கட்டிடறது நல்லது’
‘அதெல்லாம் கட்டிடலாம்’
அன்று முழுவதும் என் மனைவி தூங்கவேயில்லை, இரவு ஒன்பது மணிக்கே சாப்பாடு போட்டு படுக்கையை போட்டு என் எதிரில் உட்கார்ந்து கொட்ட கொட்ட முழித்துக்கொண்டிருந்தாள், எடுத்ததுக்கெல்லாம் பயப்படுகிறவளுக்கு எந்த விதத்திலும் என்னால் புரியவைக்க முடியவில்லை.
அடுத்த நாள் தெரிந்தவர்களிடம் எல்லாம் என் வீட்டின் பத்திரத்தை கொண்டு போய் நீட்டி பணத்தை தேத்திக்கொண்டு என் மனைவியையும் அழைத்துக்கொண்டு அந்த ஆள் ஏத்தியிடம் சென்றேன், வழியில் மயக்கமாய் வந்து தலை சுத்துகிறது என்றாள்,
‘மாத்திரையெல்லாம் ஒழுங்கா எடுத்துக்கற இல்ல’
‘என்னவோ தெரியல, ஒரு வாரமா உடம்பு சரியாயில்லை’
‘குழந்தை ஆசையெல்லாம் இப்போதைக்கு நமக்கு வேணாம், கொஞ்சம் பணம் சேர்த்துண்டு நாலு என்ன அஞ்சு கூட பெத்துக்கலாம்’
சங்கீதா பேசாமலிருந்தாள்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் தாண்டி இரயில்வே பாலம் அதற்கு அடுத்து ஒரே கூட்டம், வண்டியை விட்டு இறங்கினோம்,
என்ன ஏதென்று விசாரிப்பதற்குள் ஒருவாறு என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது,
பெரிய கோத்ரெஜ் பூட்டு, ஏழு லீவரில் (தமிழில் அர்த்தம் தெரிந்தால் எனக்கு ஒரு மின் அஞ்சல் தட்டிவிடலாம்), ஏட்டய்யா என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு வந்தார்
‘நீயும் பார்ட்டியா?’
‘புரியல!’
‘வெளிநாடு போக பணம் கட்டினியாப்பா?’
‘ஆமாம் சார்’
‘எவ்வளவு?’
‘ஒர்ரூபா சார்’
என் மனைவி அதற்குள் என்னிடம் பதுங்கி பதுங்கி ஏதோ சொல்லவந்தாள்
‘சும்மார்ரீ’
‘அவன் ஓடிட்டான், காலையிலருந்து கமிஷ்னர் ஆபிஸுக்கு அம்பது கம்ப்ளெய்ண்ட் வந்தாச்சு, ஓடு, கமிஷ்னர் ஆபிஸ் ஓடு’
‘அப்போ என் பணம், பாஸ்போர்ட்டு?’
‘படிச்சவன் தானே நீ!, பணத்தை குடுக்கறப்ப பங்குடா குடுத்துடறீங்க, அப்பல்லாம் கேக்கமாட்டன்றீங்க, அவன் ஓடிட்டான்னதும் குய்யோ முறையோன்னு போலிஸ்காரண்ட்ட வந்துடறீங்க, ஏம்ப்பா பணத்தை தான் அழுத, பாஸ்ப்போர்ட்டையுமா தருவே’,
‘அய்யோ!’
என் மனைவி மூக்குறிஞ்சி கோபத்தையும், இயலாமையையும் ஒரு சேர முந்தானையில் துடைத்துக்கொண்டாள், எனக்கு சற்று மயக்கம் வர அதுக்குப்பிறகு நடந்தது எல்லாம் முதலியார் கடை டீக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வர
‘ஏமாத்திட்டானா சங்கீதா?’
அடுத்தநாள் காலையிலேயே தூங்காமல், சவரம் பண்ணிக்கொள்ளாமல் என் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டேன், என் மேசை முழுவதும் கமிஷனரிடம் தந்த பிராதுக்கள், அது இதுவென்று நிறைய அலம்பல்கள், என் மனைவி என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை, அன்று மாலை
நான் அலுவலகம் விட்டு வந்தபோது என் மாமனார் வீட்டில் வந்து உட்கார்ந்திருந்தார், அவரும் என்னிடம் எதுவும் கேக்கவில்லை, என் மனைவி தான் என்னை அடுக்களையில் வைத்துக் கேட்டாள்.
‘பேப்பர்லல்லாம் வந்துட்டுதாமே!’
‘ம்’
‘எழுபது பேரை மோசம் பண்ணிட்டானமே, கிராதகன்’
என் மாமனார் காதில் விழவேண்டும் என்று கொஞ்சம் வேகமாக சொன்னேன்
‘அதெல்லாம் உள்ளூர்க்காரன் தான், பிடிச்சுடுவாங்க’
‘கோர்ட்டுக்கு போறாராமா?’
‘தெரியலப்பா!’
‘அவன் மஞ்ச நோட்டிஸ் நீட்டுவான், என்னால இப்ப முடியாது, எல்லாத்தையும் நாணும் ஒரு ஏஜெண்டை நம்பி ஏமாந்துட்டேன், கையில பரம்பைசா கிடையாதுன்னு பெரிசா கையை விரிப்பான், வேண்ணா அஞ்சோ பத்தோ மாசாமாசம் தரண்ணுவான்’
பொட்டில் அறைந்தாற்ப்போல் எனக்கும் பயம் தொற்றிக்கொண்டது.
‘பாஸ்போர்ட்டைப் போய் தருவீங்களா!, என்ன நீங்கள்ளாம் படிச்சவங்க!’
‘அவன் நாளைக்கே ஃபிளைட்டுன்றான், அதான் நம்பி கொடுத்தேன்’
‘சரி! எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் மூலமா ஐ.ஜி யைப் பார்த்து பேச அப்பாயிண்மெண்ட் வாங்குவோம், பாஸ்போர்ட்டையாவது மீட்டுட முடியுமான்னு பார்ப்போம்’
‘அப்ப பணம்!’, இது என் மனைவி
‘நாமம் தான்’
சொல்லிவிட்டு வெளியே கிளம்பி போய் விட்டார், ஒரு பத்து நாட்கள் கழித்து ரிஜிஸ்டர் தபாலில் என் பாஸ்போர்ட் மட்டும் வீடு தேடி வந்தது, அனுப்பிய ஊர் மும்பாய் என்று நீலம் குத்தியிருந்தது, அரை சதவீத ஆறுதலுடன் ‘பணம் நாம பார்த்து சம்பாதிக்கிறது சங்கீதா, இதப்பார் நம்ப தெய்வம் நம்மலை கை விடல!’ என்று பாஸ்போர்ட்டை பிரித்தேன், இரண்டாவது பக்கம் என் போட்டோவோடு அந்த பக்கத்தை காணவில்லை, அப்புறம் அப்புறம் வேறு சில பக்கங்களும் காணாமல் போனபோது என்க்கு அழுகையே வந்துவிட்டது.
என் மனைவி தான் போண் பண்ணி அவள் அப்பாவிடம் சொல்லியிருக்க வேண்டும், திடுதிப்பென்று வந்துவிட்டார், பாஸ்போர்ட்டை பார்த்தார்.
‘சரி! கவலைப்படாதீங்க, இதை தனியா ஒரு பிராது தந்துட்டு டூப்ளிகேட்டுக்கு அப்ளை பண்ணிக்கலாம் ‘ என்றார்
‘இவருக்கு எதுக்கப்ப டூப்ளிகேட்டு?’
‘இல்லம்மா, வாழ வேண்டிய வயசில இப்படியெல்லாம் படணும்னு இருக்குது, என் பிராவிடண்பண்ட், சேவிங்ஸ்னு கொஞ்சம் பணம் இருக்கு, அதெல்லாம் கவலைப்படாதீங்கன்னு சொல்லு, இனிமேலாவது ஹிண்டு, எக்ஸ்பிரஸ்ன்னு பேப்பர் பார்க்க சொல்லு, இண்ட்ர்வியூ அட்டண்ட் பண்ணி போக ட்ரை பண்ண சொல்லு!’ என்று கிளம்பிப்போனார்.
வருத்தமாக என் மனைவி என்னை பார்த்தாள்
‘இல்லடி செல்லம், நான் எங்கையும் போகல, இந்த வேலையே போதும், நமக்கு கிடைச்சது இது தான், அது தானே உன் விருப்பமும்?’
‘இல்லைங்க, நீங்க கண்டிப்பா சிங்கப்பூர் போகணும், உங்க கனவு நனவாகனும்’ என்றாள்
‘சங்கீதா நான் கேக்கறதுக்கு முதல்ல பதில் சொல்லு, ஒரு கல்யாணமான பொண்ணுக்கு எது மரியாதை?’
அவள் கண்களை மூடிக்கொண்டு சொன்னாள் ‘தாய்மை!’
‘கரைக்ட், நீ என்னெல்லாம் சொன்ன, நான் கேக்கவேயில்ல, பணத்தை மத்தவங்க துறத்தறதை பாத்து நாணும் இந்த சம்பள வேட்டைக்கும், டாம்பீகத்துக்கும் ஆசைப்பட்டு உன்னை ஒரு நிழல் மரமாவே நிக்கவைச்சு குளிர் காஞ்சனே அதுக்கு நான் பட்ட வேதனை தான் இதெல்லாம், இது போதும் சங்கீதா, முதல்ல நாம ஒரு குழந்தையை பெத்துப்போம், உங்க அப்பா படற கஷ்டம் போதாதுன்னு அவர் பேங்க் பேலன்ஸிலும் கை வைச்சு நாளைக்கு அதுவும்….’
‘அப்படி சொல்லாதீங்க’
‘நான் ஏமாந்து போனது எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை தந்துட்டுது, இவர் கையாலாவாத ஆளோன்னு உன் அப்பா என்னை கணக்குப்போட்டுடுவாரோன்னு பயம் வந்துட்டுது சங்கீதா!’
‘ஏமாற்றம் இல்லாத வாழ்க்கை உலகத்தில எங்கையும் பாக்க முடியாதுங்க, நல்லதும் கெட்டதும் நடந்துக்கிட்டே தான் இருக்கும், இதுக்கெல்லாம் பின் வங்கினா வாழறதுல அர்த்தமே இல்லைங்க’
நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்
எஸ்.பி அலுவலகத்திலிருந்து போண் அடித்தது, அந்த ஏஜெண்டை பிடித்து விட்டதாகவும், வாங்கிய பணத்தை அனைவருக்கும் பைசல் பண்ணுவதாகவும் சொல்லி அழைத்தார்கள்
உள்ளூர ஜில்லிப்பாய் இருந்தது.
‘பணம் வாங்கினாலும் நான் சிங்கப்பூர் போவப் போறதில்லை சங்கீதா’
‘ஏன்?’
‘ஏதோ குற்ற உணர்ச்சி, உன் அப்பா எதிர்ல தலைகுனிஞ்சு நின்ன அதிருப்தி’
‘அவர் மட்டும் யார்?, எதுக்காக அவரை மூணாம் மனுஷாளா பிரிச்சுப் பாக்கறீங்க, உங்க அப்பா மாதிரி இல்லையா அவர்?’
சற்று நேரத்துக்கு பின் கேட்டேன்
‘ஆனாலும், நான் ஏமாறல இல்ல சங்கீதா?’
‘ஆமாம்!’
‘என்ன ஆமாம்?’
‘என் புருஷன் எதிலும் எப்பவும் ஏமாறமாட்டான் போதுமா!’
‘அப்படி சொல்றீ என் எட்டாம்பு!’

1 comment மே 12, 2008

atchaya paathiram

kavidhaikal

thamizh nenje

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« மே    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

தொகுப்புகள்

Blogroll

தற்போது

பதிவுகள்

Haasya kadhai சிறுகதை

வகைகள்

அண்மைய மறுமொழிகள்

senthilkumaran singa… மேல் Short Story – Ettambu (8…
senthilkumaran singa… மேல் About
Watch videos at Vodpod and other videos from this collection.

வகை மேகம்

Uncategorized

Blog Stats

Top Clicks

Top Posts

Flickr Photos

27/365 : Escape

Okinawa Churaumi Aquarium

let the wind blows

More Photos